~
வருடத்திற்கு ஒரு முறை
ஒரு வாரம் தாய் வீடு போகிறாய் !
பிள்ளைகள் இல்லாமல் களையிழந்து
பொலிவிழந்து பாலைவனமாய் காணப்படுகிறது வீடு
காபி போட அடுப்பில் பால் வைத்தால்
பாதி பொங்கி வழிந்துவிடுகிறது
வீட்டைப் பெருக்கிய இரண்டு நாட்களில்
இடுப்பும் முட்டியும் வலிக்கிறது
செலவுக்குப் பயந்து சமைக்க ஆரம்ப்பித்தால்
உப்பு போட மறந்து விடுகிறது
இரு மடங்கு விலை வைத்தும் சொத்தை காய்கறிகளை பழங்களைத்
தலையில் கட்டி விடுகிறார் வண்டிக்காரர்
முரட்டுதனமாய் அடித்து கசக்கி பிழிந்து துவைத்தால்
கிழிந்தி விடுகிறது துணி
தண்ணீர் மோட்டார், ரேடியோ , டிவி போட்டால்
அணைக்காமல் தூங்கி விடுகிறேன்
கதவைப் பூட்டாமலேயே சமயலறை எரிவாயுவை
அணைக்காமலே அலுவலகம் கிளம்பி விடுகிறேன்
இப்படியாக தனிமையிலே தவித்துப் போனாலும்
நீ வந்தவுடன் கூசாமல் பொய் சொல்கிறேன்
"இன்னும் ஒரு வாரம் இருந்து வரலாமே
நான் ஜாலியா இருக்கிறேன்" என்று
~
Sunday, February 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment