Saturday, February 20, 2010

வேலைக்கும் போகும் பெண் - வைரமுத்து !

~

இந்தியாவிற்கு ஒரு ஆகஸ்ட் 15 வந்து விட்டது
இந்திய பெண்களுக்கு ஆகஸ்ட் 15 எப்போது ?
பொருளாதார விடுதலை கிடைத்துவிட்டால்
பூட்டியிருக்கும் விலங்குகள் நொருங்கிவிடும்
என்று கருதியவள் போன நூற்றாண்டு பெண்
ஆனால் பொருளாதார விடுதலை கூட சில
புதிய விலங்குகளை பூட்டியிருக்கிறது
என இனங்கண்டுகொண்டவள் இந்த நூற்றாண்டு பெண்..

சிறகு இருந்தும் பறக்க முடியவில்லையே என்று விம்மியவள்
வீட்டுக்குள் இருந்த பெண் !
பறப்பதற்கு இரண்டு சிறகுகள் போதவில்லையே என்று
விசும்புகிறவள் வேலைக்கு போகும் பெண்

வேலைக்கு போகும் பெண் தன் வாழ்க்கைக்கு
கொடுக்கும் விலை கொஞ்ச நஞ்சம் அல்ல
போன நூற்றாண்டில் ஒரு காலும் , இந்த
நூற்றாண்டில் ஒரு காலும் பதித்து கொண்டு அடுத்த அடி
எடுத்துவைக்க முடியாமல் திசையிழந்த பெண்மை
திரிசங்கு சொர்க்கத்தில் தவிக்கிறது

அலுவலகம் செல்லும் ஒரு பெண்ணின்
அவரச தாலாட்டுதான் இந்த கவிதை
.இந்த அவரச நூற்றாண்டு மனிதர்களை
இருதயம் துடிக்கும் எந்திரர்களாய் மாற்றிவிட்டது

மனிதன் நெருப்பில் உட்கார்ந்து கொண்டு
வயலின் வாசிக்கிறான்
அடுப்பில் உட்கார்ந்து கொண்டு காதலிக்கிறான்
கணவனும் மனைவியும் இண்டர்காமில்
தாம்பத்தியம் நடத்துகிறார்கள்

குழந்தைக்கு முத்தம் தபாலில் வருகிறது
காதலிக்கு வாங்கிய மல்லிகைப்பூ
டீசல் புகையில் கருப்பாகிவிடுகிறது
இப்படி நிறம் மாறி போன ஒரு வாழ்க்கையில்
தாய்பாடும் ஒரு தாலாட்டு மட்டும்
தடம் மாறி போகாமல் இருக்குமா?
எனவேதான் ஒரு குழந்தைக்கு
முன் இரவில் பாடப்பட வேண்டிய தாலாட்டு
முற்பகலில் பாடும் தாலாட்டாய் முகம் மாறிவிடுகிறது
வேலைக்கு போகும் நெருப்பு நிமிடங்களில்
அன்னை ஒருத்தி பாடும் அவசர தாலாட்டு இது

"சோலைக்கு பிறந்தவளே சுத்தம் உள்ள தாமரையே
வேலைக்கு போகின்றேன் வெண்ணிலவே கண்ணுறங்கு
அலுவலகம் விட்டு அம்மா வரும்வரைக்கும்
கேசட்டில் தாலாட்டு கேட்டபடி கண்ணுறங்கு !

ஒரு மணிக்கு ஒருபாடல் ஒலிபரப்பும் வானொலியில்
விளம்பரங்கள் மத்தியில் விழி சாய்த்து நீ உறங்கு
ஒன்பது மணி ஆனால் உன் அப்பா சொந்தம் இல்லை
ஒன்பது முப்பதுக்கு உன் அம்மா சொந்தம் இல்லை
ஆயாவும் தொலைகாட்சி அசதியிலே தூங்கிவிட்டால்
உனக்கு தூக்கத்தை தவிர துணைக்கு வர ஆளில்லை

இருபதாம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே
இதுதான் கதி என்று இன்னமுதே கண்ணுறங்கு !
தூரத்தில் இருந்தாலும் என் நினைவு
உன் தொட்டில் ஓரத்தில் ஓடிவரும் கண்ணுறங்கு !

பேருந்தில் நசுங்கி பிதுங்குகின்ற வேளையிலும்
எடை கொஞ்சம் குறைந்து இறங்குகின்ற வேளையிலும்
கோப்புக்குள் மூழ்கி குடியிருக்கும் வேளையிலும்
பூபூவாய் உனது முகம் புறப்பட்டுவரும் கண்ணே

தந்தை வந்து கொஞ்சுவதாய்
தாய்மடியில் தூங்குவதாய்
கண்ணான கண்மணியே கனவு கண்டு கண்ணுறங்கு..
புட்டி பால் குறையவில்லை பொம்மைக்கும் பஞ்சமில்லை
தாய்பாலும் தாயுமன்றி தங்கமே உனக்கு என்ன குறை ?
மாலையிலே ஒடிவந்து மல்லிகையே உனை அணைத்தால்
சுரக்காத மார்பும் கூட சுரக்குமடி கண்ணுறங்கு !

தாலாட்டு பாட்டில் தளிரே நீ தூங்கிவிட்டால்
கோலாட்டம் ஆட கொண்டவர்க்கு ஆசை வரும்
உறவுக்கு தடையாக ஓ வென்று அலறாமல்
இரவுக்கு மிச்சம் வைத்து இப்போது நீ உறங்கு

தாய் என்று காட்டுதற்கு தழுவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் நல்லவளே கண்ணுறங்கு !

~

No comments:

Post a Comment