Saturday, April 18, 2009

இது நம்ம தேசம்! - கவிஞர் ராசை. கண்மணி ராசா

~


இது நம்ம தேசம்!
=================

எலிகூட கிடைக்காமல்
இறந்துகொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மொழியின் சிறப்புகளை
முழக்கமிட்டுப் பேசும்!

பாலின்றி சேயும் கூழின்றி தாயும்
பரிதவித்துச் சாகும் தேசம் - மறுபுறம்
பாதாம் பருப்பில் பாயசம் என
சமையல் குறிப்புகள் பேசும்!

வேலையின்றி இளைஞர் கூட்டம்
வெந்து சாகும் தேசம் - மறுபுறம்
பெப்சி உமாவுடன் பேசுங்கள்
பிறகென்ன? என சேனல்கள் பேசும்!

குடிக்க நீரின்றி
குடங்களுடன் அலையும் தேசம் - மறுபுறம்
கோகோ கோலா ஐந்து ரூபாய்தானென
விளம்பரங்கள் வக்கணையாய்ப் பேசும்!

படுக்க இடமின்றி மக்கள்
பாதையோரம் கிடக்கும் தேசம் - மறுபுறம்
"அகண்ட பாரதத்தில் உகாண்டா" என
அடாவடியாய்ப் பேசும்!

மனுக்களை அனுப்பி
மன்றாடிக் கொண்டிருக்கும் தேசம் - மறுபுறம்
மாண்புமிகுகளோ மப்புடன்
மனுதர்மம் பற்றிப் பேசும்!

ஏர்தொட்ட கரங்களை
தேர்தொட விடாத தேசம் - மறுபுறம்
எல்லோரும் இந்நாட்டு மன்னரென
இலக்கியம் பேசும்!

எல்லாவற்றையும் சகிக்கும் தேசம்
என்றாவது எதிர்த்துப் பேசும்
அன்று அதன் பேச்சு உங்கள்
செவியில் மட்டுமல்ல
செவிட்டிலும் விழும்!

- கவிஞர் ராசை. கண்மணி ராசா
இராசபாளையம், தமிழ்நாடு.

(அவரது "கவிதையாவது....கழுதையாவது!" -கவிதைநூலில் )

சிறப்பான கவிதை ..செவிட்டில் விழப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை..

~

4 comments:

ஆ.ஞானசேகரன் said...

பகிர்வுக்கு நன்றி

Divyapriya said...

nalla kavidhai...nanri valarpirai

பூங்குழலி said...

இவரின் இந்த தொகுப்பு வெகு அருமை

தேவன் மாயம் said...

அன்புடன் மதுரை சந்திப்பில் சந்தித்தேன்!!
விழிப்புணர்வு கவிதைகளில் எந்த தய்க்கமும் இன்றி எழுதுகிறார்!!

Post a Comment